insert text here

 

ஆண்டின் பொதுக்காலம்
5ஆம் ஞாயிறு


திருப்பலி முன்னுரை

கிறிஸ்து இயேசுவில் அன்புக்குரியவர்களே!!

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள்.எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவே என் ஆண்டவர் என்று அறிக்கையிட்டு அவரை வழிபட இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்தி அன்புடன் வரவேற்கின்றோம்.இன்று பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு.உதவி கேட்டு வருபவர்கள்தாம் உலகில் அதிகம். உதவிக்கு வருபவர்கள் மிகச் சிலர்தான். ஆனால் எல்லாரையும் எல்லா வகையிலும் விடுவிப்பவராக இருக்கிறார் இயேசு என்பதை சிந்திக்க அழைக்கிறது நற்செய்தி.இறையேசுவில் பிரியமானவர்களே! பரபரப்பான சூழலில் பல்வேறு பொறுப்புகளால் நமது வாழ்வு நெருக்கடிக்குள்ளாகி தடுமாறுகிறது. அமைதியில், குடும்பத்தில், உறவுகளில் இறைவனை கண்டு இளைப்பாறுதல் பெற நமது ஆண்டவர் இயேசு அவரது திருப்பலிக்கு அழைக்கிறார். தனிமையான இடத்தில் இறைவேண்டுதல் வழியாக இயேசு ஆற்றல் பெற்றது போல நாமும் குறிப்பாக நமது குழந்தைகள் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவர்களாய் வாழ அருள்வேண்டி தொடரும் இத்திருப்பலியில் இறைஞ்சி மன்றாடுவோம்.

முதலாம் வாசக முன்னுரை: வாசகம் யோபு 7:1-4,6-7

மனிதனுடைய வாழ்வு போரட்டம் நிறைந்ததாகத்தான் இருக்கின்றது. அந்தப் போராட்டத்தில் அவன் சந்திக்கக்கூடியது ஒன்று நோய். எந்தவிதமான நோய் எனக்குள் வந்து பாதித்தாலும் நான் அதற்கு அஞ்சமாட்டேன் ஏனென்றால் நான் கடவுளிள் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்; என்று துன்புறும் உழியனாகிய யோபு கூறுவதை வாசிக்க கேட்போம்.

முதல் வாசகம்

யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7

யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூர்வீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 147: 1-2. 3-4. 5-6
பல்லவி: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்.

1 நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது.
2 ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். -பல்லவி

3 உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.
4 விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். -பல்லவி

5 நம் தலைவர் மாண்பு மிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது.
6 ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். -பல்லவி

முன்னுரை : இரண்டாம் வாசகம் 1கொரி.9:16-19,22-23

இன்றைய இரண்டாம் வாசகத்தில் நற்செய்தி அறிவிக்க வேண்டிய தன் கடமையைப் பற்றிப் பேசும்போது, பவுலடியார் நம் இதயத்தைத் தொடுகின்றார். நற்செய்தி அறிவிப்பைப் பற்றிப் பேசும்போது, அவர் மூன்று செய்திகளைத் தருகின்றார்:நற்செய்தி அறிவிப்பது அவர்மேல் சுமத்தப்பட்ட கடமை. அதை அவர் நிறைவேற்றியே தீர வேண்டும். அது தன்னார்வத் தொண்டு அல்ல, மாறாக சுமத்தப்பட்ட கடமை. நற்செய்தி அறிவிப்பு என்பது ஓட்டப்பந்தயம் போன்றது. அதில் பங்கேற்பவர் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓட வேண்டும். நற்செய்தி அறிவிப்பு என்பது குத்துச் சண்டை போன்றது. அதில் பங்கேற்போர் பலவிதமான பயிற்சிகளைச் செய்து தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். பவுலடியார் தன்னைப் பற்றிப் பேசியது திருமுழுக்கு பெற்ற நம் அனைவருக்கும் பொருந்தும். நற்செய்தி அறிவிக்கும் கடமை நம் அனைவருக்கும் உரியது. அதை நாம் சுமக்க வேண்டும். வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடவேண்டும். அதற்கான பல்வேறு பயிற்சிகளையும், தியாகங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23

சகோதரர் சகோதரிகளே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம்கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக்கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெற வேண்டி, நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப்பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரைவிட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ``எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்கள். அதற்கு அவர், ``நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்'' என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


விசுவாசிகள் மன்றாட்டுகள்

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அனைவரும் என்னைப் போல் நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொன்ன எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள்,குருக்கள்,கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்

எங்கள் தந்தையாகிய தந்தையே! துன்பங்களாலும், துயரங்களாலும், வறுமையாலும் வாடிக்கொண்டிருக்கும் அனைவர் மீதும் இரங்கி, ஆசி வழங்கி, உம் திருமுக ஒளியை அவர்கள்மீது வீசி அமைதியையும், மகிழ்ச்சியையும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவருக்கும் இரக்கம் காட்டு அன்புத் தந்தையே இறைவா! எம் இளைஞர்கள் அனைவர்மீதும் உமது நிறை ஆசியை வழங்கி! அவர்களை உமது அன்பின் ஆழுகைக்குள் வைத்துக் காத்து வழிநடாத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இந்த சினனஞ்சிறு குழந்தைகளுக்கு செய்தபோதெல்லாம் எனகே செய்தீர்கள் என்று மொழிந்த இறைவா, எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொலுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வை தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாக்கின்றவரும், எம் உயிரை என்றும் காத்திடுகின்றவரும், நாம் போகும் போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் எம்மைக் காத்தருள்பவருமான தந்தையே! அவதியுற்று அல்லலுறும் எம் தமிழ் மக்கள்மீது மனமிரங்கி நாங்கள் ஏங்கித் தவிக்கின்ற முழுமையான விடுதலை வாழ்வை எங்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உயர்களுக்கு உயிர் கொடுக்கம் அன்புத் தந்தையே! நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வழிகாட்டும் இறைவா! ஒரே குடும்பமாக கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மை பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறைக் கொண்டு வாழவும் குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் பிறப்பிடமே எம் இறைவா! எங்கள் நாட்டு அரசியல் சமுதாய தலைவர்கள் அனைவரும் மக்களை நல்வழியில் அக்கறையுடன் சுயநலமில்லாமல் செயல் திட்டங்கள் தீட்ட அதனை செயல்படுத்த அருளைதர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

 

text