திருச்சபை வரலாறு

அதிகாரம் 2
இடைக் காலத் திருச்சபை
(கி.பி. 700-1517)

சிலுவைப் போர்கள்

சிலுவைப் போர்கள்
இஸ்லாமியரின் ஆதிக்கத்திலிருந்து பாலஸ்தீனத்தை மீட்கவும், கிறிஸ்தவ சமயத்தை நிலைநாட்டவும், இயேசு வாழ்ந்த புனித பூமிக்குத் திருப்பயணமாகச் சென்றவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், மேலைக் கிறிஸ்தவ நாடுகள் இணைந்து நடத்திய போர்கள் "சிலுவைப் போர்கள்” என்று அழைக்கப்படுகின்றன. வரலாற்றில் 6 சிலுவைப் போர்கள் குறிப்பிடப்படுகின்றன (1090-1270).

637ல் இருந்தே பாலஸ்தீனம் இஸ்லாமியரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டபோதிலும் கிறிஸ்தவத் திருப்பயணிகள் திருத்தலங்களுக்குச் சென்று வந்தனர். 1070 இல் துருக்கியர்கள் அங்கு நுழைந்ததிலிருந்து திருப்பயணிகளுக்குத் தொல்லைகள் ஏற்பட்டன. கொன்ஸ்தாந்திநோப்பிள் நகரத்தைத் துருக்கியர் தாக்கியபோது கீழைப் பேரரசன் முதலாம் அலெக்ஸியுஸ் மேலைத் திருச்சபையின் உதவியை நாடினான். திருத்தந்தை இரண்டாம் அர்பன் (1088-1099) கீழைத் திருச்சபையை இஸ்லாமியரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் இயேசு வாழ்ந்து இறந்த புனித பூமியை விடுதலை செய்யவும், மேலைத் திருச்சபையைச் சார்ந்த மக்கள் முன்வரவேண்டும் என்று 1095ல் உருக்கமான அழைப்பு விடுத்தார். “இது கடவுளின் விருப்பம்!” என்று கூறி மக்களுக்கு எழுச்சி ஊட்டினார்.

முதல் சிலுவைப்போர் (1096-1099)
ஒரு பெருங் கும்பல் ஆர்வத்தோடு புறப்பட்டுச் சென்றது. வழியில் முடிந்தவரை யூதர்களைக் கொன்றது. ஆனால் பாலஸ்தீனம் அடைவதற்கு முன்னாலேயே துருக்கியர் அவர்களைக் கொன்று குவித்தனர். போர் வீரர்கள் குழு ஒன்று பல இன்னல்களை அனுபவித்து எருசலேம் நகரை 1099இல் கைப்பற்றியது. ஆனால் நகரைக் கைப்பற்றியபின் ஆயிரக்கணக்கான மக்களை இவ்வீரர்கள் கொன்று போட்டனர். மத வெறி ஒரு பக்கம், வழியில் அனுபவித்த கஷ்டங்கள் மறுபக்கம் இவர்களுக்கு வெறியூட்டிவிட்டன. எருசலேமில் ஒரு "கிறிஸ்தவ அரசு” அமைக்கப்பட்டது.

இரண்டாம் சிலுவைப்போர் (1147-1149)
பிரான்சு மற்றும் ஜெர்மானிய அரசர்கள் போர் வீரர்களை அனுப்பினர். பல மோதல்களில் துருக்கியர் இவர்களைச் சின்னாபின்னமாக்கிவிட்டனர். 1187ல் எருசலேம் கிறித்துவர் கையைவிட்டு நழுவியது.

மூன்றாம் சிலுவைப்போர் (1189-1192)
எருசலேமை மீண்டும் கைப்பற்ற பிரடரிக் பார்பரோஸ்ஸா மற்றும் ஆங்கில, பிரஞ்சு படைகள் முயன்றனர். இம்முயற்சி வெற்றிபெறவில்லை . 1192இல் சுல்தான் சலாதீனோடு ஓர் உடன்படிக்கை செய்யப்பட்டது. கிறிஸ்தவ திருப்பயணிகள் எருசலேமுக்குச் செல்ல தடை இராது என்று முடிவு செய்யப்பட்டது.

நான்காம் சிலுவைப்போர் (1202-1204)
திருத்தந்தை 3ஆம் இன்னொசென்ட் இந்தப் போருக்கு அழைப்புவிடுத்தார். ஆனால் சுயநலவாதிகளான சில வணிகர்கள், வியாபாரம் வளர்ப்பதற்காக போர்வீரர்களை கொன்ஸ்தாந்திநோப்பிளுக்குத் திருப்பிவிட்டனர். அங்கு இவ்வீரர்கள் கீழைப் பேரரசின் ஆட்சியில் குறுக்கிட்டதோடு தலைநகரைச் சூறையாடவும் செய்தனர். அங்குள்ள கிறிஸ்தவ மக்களை எதிர்த்துப் போரிட்டனர். கீழைப் பேரரசின் பகுதியில் ஒரு ‘இலத்தீன் அரசு' ஏற்படுத்தப்பட்டது. மேலைத் திருச்சபைக்கும், கீழைத் திருச்சபைக்கும் இடையே நிலவிய பிளவு இதனால் இன்னும் அதிகரித்தது. ஆதிக்க வெறியின் பிடியில் திருச்சபை அல்லலுற்றது.

ஆயுதந்தாங்கிய வீரர்களை அனுப்பினால் அழிவுதான் ஏற்படும் என்ற * எண்ணத்தில் அப்பாவி சிறுவர்களை அனுப்பி புனித பூமியை மீட்கலாம் என்று சிலர் எண்ணினார்கள். ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர் 1212ல் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி பகுதிகளிலிருந்து திரட்டப்பட்டு எருசலேம் நோக்கி கொண்டு செல்லப்பட்டார்கள். ஆல்ப்ஸ் மலையில் குளிர் தாங்காமல் பலர் மாண்டனர். இத்தாலி வந்ததிலிருந்து கூட்டம் சிதறுண்டது. சிறுமியர் மானபங்கப்படுத்தப்பட்டனர். சிறுவர்கள் கப்பல்களில் ஏற்றிச்செல்லப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டனர். கப்பல் கவிழ்ந்து இறந்தவர்களும் உண்டு. இத்தகைய ஒரு மூடத்தனமான செயல் ஏன் நடந்தது என்பதை இன்று நம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை. மதவெறி எந்த அளவுக்குப் போனது என்பது ஒரு பக்கம், அது எப்படி மக்களை அடிமைப்படுத்தியது என்பது மறுபக்கம் இதற்கு விளக்கமாகலாம்.

ஐந்தாம் சிலுவைப் போர் (1228-1229)/
2ஆம் பிரடரிக் மன்னன் ஒரு சிறிய படையை மட்டும் நடத்திச் சென்று எகிப்திய சுல்தானை சந்தித்து பேச்சுவார்த்தைகள் வழியாக எருசலேம், பெத்தலேகம், நாசரேத்து பகுதிகளைக் கிறிஸ்தவர்களுக்கெனப் பெற்றான். இதுதான் வெற்றியாக முடிந்த சிலுவைப்போர். ஆனால் 1244இல் எருசலேம் மீண்டும் கிறிஸ்தவர்கள் கையிலிருந்து நழுவியது.

ஆறாம் சிலுவைப்போர் (1248-1254)
பிரான்ஸ் நாட்டு மன்னன் 9ஆம் லூயி எகிப்தையும் புனித பூமியையும் கைப்பற்ற எண்ணினான். 1250இல் மன்னனும் படைகளும் தோல்வியடைந்தனர். 1270இல் மீண்டும் ஒரு முறை தோல்வியைத் தழுவினார். அதோடு சிலுவைப் போர்களும் முடிவுற்றன.

கற்றுக் கொண்ட பாடம்:
சிலுவைப் போர்களிலிருந்து திருச்சபை கற்றுக்கொண்ட பாடம் என்ன? நிலப்பகுதிகளைக் கைப்பற்றுவதற்காகத் திருச்சபை ஒருபோதுமே போரில் ஈடுபடலாகாது! புனித பூமியை கிறிஸ்துவுக்காக மீட்டுத் தருவதற்குக்கூட ஆயுதம் தாங்கிய போர் செய்தல் ஆகாது!

அடுத்த பாடம்

 

image