திருச்சபை வரலாறு

அதிகாரம் 2
இடைக் காலத் திருச்சபை
(கி.பி. 700-1517)

விசாரணை மன்றம் (Inquisition)

திருச்சபையின் ஆட்சி உறுதிப்படல்
12ஆம் நூற்றாண்டில் உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட ஆலயங்கள் கோத்திக் கட்டிடக்கலைப் பாணியில் உருவாயின. பக்தி முயற்சிகள் தனி மனிதனை மையமாகக் கொண்டிருந்தன. நற்கருணை வழிபாடு, குறிப்பாக நற்கருணையில் இயேசுவின் பிரசன்னத்தை மையமாகக் கொண்டு வளர்ந்தது. நற்கருணை விருந்தில் பங்கேற்பதைவிடவும், நற்கருணையை வழிபடுவதே அதிகமாக வலியுறுத்தப்பட்டது. அனைவரும் பங்கேற்கின்ற ஒரு விருந்து என்று திருப்பலியைப் பார்க்காமல் அதை ஒரு மேடை நிகழ்ச்சிபோல் பலரும் கருதினார்கள்.

13ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இரண்டு முக்கிய திருத்தந்தையர் பற்றி குறிப்பிடப்படவேண்டும். 3ஆம் இன்னொசென்ட் (1198-1216), 8ம் போனிபாஸ் (1294-1303) ஆகிய இருவரும் திருச்சபையின் தலைமைப் பீடத்தை" மிகவும் வலுப்படுத்தினார்கள். மன்னர்களையும் ஆட்சியாளர்களையும் உரையாடல் வழியாக அல்லது திருச்சபை விலக்கு என்ற தண்டனை வழியாக இவர்கள் அடிபணிய வைத்தனர். 1215இல் நடைபெற்ற நான்காம் லாத்தரன் பொதுச்சங்கம் வருடத்தில் ஒருமுறையாவது பாஸ்கா காலத்தில் கிறிஸ்தவர்கள் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்று நற்கருணை உட்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது.

3ஆம் இன்னொசென்ட் “கிறிஸ்துவின் பிரதிநிதி" என்ற பட்டத்தை முதன் முறையாகச் சூடியவர் ஆவார்.

8ஆம் போனிபாஸ் திருச்சபை ஞான காரியங்களிலும் உலகு சார்ந்த காரியங்களிலும் முழு அதிகாரம் கொண்டுள்ளது என்று வலியுறுத்தினார். திருச்சபையின் வரலாற்றில் முதன் முறையாக “ஜூபிலி ஆண்டு" கொண்டாடப் பணித்தவர் இவர்தாம் (கி.பி. 1300). அப்போது சுமார் 10 லட்சம் திருப்பயணிகள் ஞானப் பலன்களை பெறுவதற்காக உரோமை சென்றதாக வரலாறு கூறுகிறது.

திருச்சபையின் ஏழ்மையை வலியுறுத்திய இயக்கங்கள் - "விசாரணை மன்றம்"
சிலுவைப் போர்கள் மற்றும் வர்த்தக உறவுகள் காரணமாகத் திருச்சபையின் பணபலம் வளர்ந்தது; ஊழல்களும் மலிந்தன. எனவே, சீர்திருத்தக் குழுக்கள் தோன்றலாயின. பீற்றர் வால்டெஸ் என்பவர் வால்தேசியர்! இயக்கத்தை 13ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்தார். திருச்சபை இயேசுவைப் போல், ஆதி கிறிஸ்துவர்களைப் போல் ஏழ்மையைத் தழுவ வேண்டும் என்று இவ்வியக்கம் வலியுறுத்தியது. பின்னர் அருளடையாளங்கள், புனிதர் வணக்கம், உத்தரிக்கும் இடம், ஞானப் பலன்கள் போன்றவற்றை மறுத்தனர்.

தெற்கு பிரான்சில் ஆல்பா என்ற இடத்தில் தழைத்த ஓர் இயக்கம் ஆல்பிஜேன்சியர் குழு ஆகும். இதன் உறுப்பினர்கள் தம்மை கத்தார் (கிரேக்க மொழியில் "தூயவர்" என்று பொருள்) என்று அழைத்துக்கொண்டனர். இவர்களும் திருச்சபை தனது செல்வங்களைத் துறந்துவிட்டு ஏழையான இயேசுவைப் போல ஏழையாக வாழவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இவர்களது கொள்கையில் தவறுகள் இருந்தன. ஆன்மா தூயது என்பதால் பாவம் நிறைந்த உலகுக்கும் ஆன்மாவுக்கும் இடையே உள்ள முரண்பாடு ஒருபோதுமே மாறாது, திருமணம் தவறு, சொத்துரிமை தவறு - இவைபோன்ற கருத்துக்களைப் பரப்பினர்.

மேற்கூறிய இயக்கங்கள் பல மக்களைக் கவர்ந்தன. திருச்சபையில் சீர்திருத்தம் கொணரவேண்டும் என்ற ஆர்வத்தால் உந்தப்பட்டுச் செயல்பட்ட போதிலும் இவ்வியக்கங்கள் ”தப்பறைக் கொள்கைகள்" என்ற முத்திரை குத்தப்பெற்றன; திருச்சபையிலும், நாட்டிலும் குழப்பத்தை உருவாக்கியதாக அவை மீது குற்றம் சாட்டப்பட்டது. எனவே இவ்வியக்கத்தினர் பலரும் வேட்டையாடப்பட்டு கழுமரத்தில் எரித்துக் கொல்லப்பட்டனர். இப்பணியைச் செய்ய “விசாரணை மன்றம்" (Inquisition) ஏற்படுத்தப்பட்டது.

தப்பறைக் கொள்கைகளைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இயக்கங்கள் திருவிவிலியத்துக்கு முக்கியத்துவம் அளித்தன. திருச்சபையின் * சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டின. கிறிஸ்துவின் ஏழ்மையைப் பின்பற்றுவதற்கு அறைகூவல் விடுத்தன. இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இந்த இயக்கங்கள் ”இறைவாக்கினர் பணி' ஆற்றின எனலாம்.

மதச் சுதந்திரம் எல்லா மனிதருக்கும் உண்டு என்று உறுதியாக ஏற்றுக்கொள்ளும் நமக்கு முற்காலத்தில் திருச்சபையில் மதச் சகிப்புத்தன்மை இல்லாதிருந்தது வியப்பைத் தருகிறது. திருச்சபையும் அரசியலும் பின்னிப் பிணைந்திருந்ததால், திருச்சபையில் ஏற்படும் கருத்து வேற்றுமை நாட்டிலே பிளவைக் கொணர்ந்தது. ஆக, ஆட்சியாளர்களும், மதச் சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை. உடலிலே சித்திரவதை அனுபவத்தாலும் பரவாயில்லை நரகத்திலே நித்திய வேதனை அனுபவிப்பதிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றொரு திரிபுவாதம் அன்று பயன்படுத்தப்பட்டது. எனவே, ”விசாரணை மன்றம்” வழியாக, சித்தரவதைகள் மூலம் மக்களைத் தப்பறைக் கொள்கையிலிருந்து மீட்டு உண்மை விசுவாசத்தை ஏற்கச் செய்யத் திருச்சபையும் 'ஆதரவு தந்தது.

இவ்வாறு திருச்சபை செயல்பட்டது சரியல்ல என்பதை இன்று நாம் ஏற்றுக்கொள்கிறோம். எல்லா மனிதருக்கும் சுயமாக சிந்திக்க, கருத்துத் தெரிவிக்க உரிமை உண்டு என்பதை அறிக்கையிடுகிறோம்.

அசிசி நகர் ஏழை மனிதர் பிரான்சிஸ் (1181-1226)
மத்திய இத்தாலியில் உள்ள அசிசி நகரில் 1181ஆம் ஆண்டு பிரான்சிஸ் பிறந்தார். அவருடைய தந்தை செல்வம் படைத்த ஒரு துணி வியாபாரி. பிரான்சிஸ் போர்வீரர் ஆனார். ஒருநாள் ஓர் ஆலயத்தில் செபித்துக்கொண்டிருந்தபோது பாடுபட்ட சுருபத்திலிருந்து ஒரு குரல் கேட்டார். "பாழடைந்து கொண்டிருக்கின்ற என் ஆலயத்தைக் கட்டியெழுப்பு!" கற்களாலான கோவிலைப் பழுதுபார்க்கச் சொன்னதாகத்தான் பிரான்சிஸ் முதலில் நினைத்தார். பிறகுதான் சீரழிந்த நிலையில் இருக்கும் திருச்சபையைச் சீர்திருத்தும் பணியைச் செய்ய இறைவன் தம்மை அழைப்பதாக உணர்ந்தார். ஏழ்மையைத் தழுவிய இயேசுவைப் பின்பற்றி ஏழையாக வாழ்ந்து நற்செய்திக்குச் சான்று பகரத் தொடங்கினார். அவரோடு, வேறுபலர் சேர்ந்தனர். திருச்சபையில் புத்துணர்ச்சி கொணர்ந்த ஓர் இயக்கம் உருவாயிற்று. பிரான்சிஸ் இறைவனின் படைப்புலகின் மீது அன்பு கொண்டிருந்தார். இயேசுவின் மனிதப் பண்பை வலியுறுத்தினார். கிறிஸ்து பிறப்புக் குடிலுக்கு வடிவம் தந்தார். 1228இல் புனிதராக அறிவிக்கப்பட்டார்.

பிரான்சிஸ் ஒரு துறவற சபையைத் தொடங்கிய அதே காலத்தில் ஸ்பெயின் நாட்டவரான புனித தோமினிக் (1170-1221) இன்னொரு துறவற சபையைத் தொடங்கினார். தொமினிக்கர் சபை என அது பெயர்பெற்றது. ஆல்பிஜேன்சியரை மன மாற்றுவதற்காக இச்சபையினர் பெரிதும் உழைத்தனர். எளிய கிறிஸ்துவ வாழ்வு, ஆழ்ந்த விசுவாசம், உறுதியான கொள்கைப் பிடிப்புள்ள மறைப் போதகம் ஆகியவற்றின் வழியாக மக்களை மனந்திருப்ப உழைத்தனர்.

இறையியல் வளர்ச்சி
திருச்சபையின் இடைக்கால வரலாற்றில் ஓர் உச்சக்கட்டம் 13ம் நூற்றாண்டு என்றால் மிகையாகாது. 11ஆம் நூற்றாண்டிலேயே பேராலயங்கள் எழுந்தன. கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன. உயர் படிப்பிற்கான பல்கலைக்கழகங்கள் 1200இல் நிறுவப்பட்டன. பல அறிஞர்கள் இணைந்து வந்து கல்விப் பயிற்சிக்காக இவற்றைத் தொடங்கினர். முதலில் பாரிஸ் பல்கலைக்கழகம் (இறையியல்) பொலோஞ்ஞா பல்கலைக்கழகம் (சட்டம்) பின்னர் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் தோன்றலாயின. மருத்துவம், சட்டம், இறையியல், எனும் துறைகள் இவற்றில் பேர் போனவை.

இறையியல் படிப்பில் விவிலியம் முக்கிய இடம் வகித்து மனிதனின் பகுத்தறிவு விசுவாசத்திற்கு எதிரானதல்ல என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் இறையியல் படிப்பு அமைந்தது. கிரேக்க மெய்யியல் அறிஞராகிய அரிஸ்டாட்டிலின் நூல்கள் இலத்தீனில் மொழி பெயர்க்கப்பட்டு இறையியல் படிப்பிற்கு ஓர் அடித்தளமாயிற்று. தலைசிறந்த சில இறையியல் வல்லுநர்கள், பிரான்ஸிஸ்கு சபையைச் சார்ந்த புனித பொனவெந்தர் (1217-1274); தொமினிக்கர் சபையை சார்ந்த புனித பெரிய ஆல்பர்ட் (1200-1280). அவருடைய சீடர் புனித ஆக்வீனா தோமையார் (1225-1274) என்போர் ஆவர்.

அடுத்த பாடம்

 

image